MENU
பெயர் — அப்துல்லாஹ்
குன்யா (அழைப்புப்பெயர்) — அபூபக்கர்
தந்தை — அபூ குஹாஃபா
பிறப்பு — நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்கு மூன்றாம் ஆண்டு
வயது — அறுபத்து மூன்று
குலம் — பனூ தைம்
பட்டப்பெயர் — ஸித்தீக்
தாய் — உம்முல் கைர்
வஃபாத் — ஹிஜ்ரியின் பதிமூன்றாம் ஆண்டு
ஆட்சிக்காலம் — இரண்டு ஆண்டு மூன்று மாதம்
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) சிறுவயதிலிருந்தே நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்தார். இஸ்லாத்தை ஏற்ற முதல் ஆணும் இவரே. உஸ்மான் இப்னு அஃஃபான் (ரலி) போன்ற பல முக்கிய ஸஹாபாக்கள் இவரின் மூலம் இஸ்லாத்தை ஏற்றனர். முஸ்லிமானதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட பிலால் முஅத்தின் (ரலி) போன்ற ஏழு அடிமைகளை அவர் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார். நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்தையும் கேள்வியின்றி நம்பியதால் இவருக்கு “ஸித்தீக்” என்ற பெயர் கிடைத்தது.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் போது உடன் சென்ற ஒரே தோழர் ஸித்தீக் (ரலி) ஆவார். நபி (ஸல்) அவர்களுக்கு நோய் தீவிரமானபோது, அவர்களின் பிரதிநிதியாக இமாமத் நடத்த நியமிக்கப்பட்டதும் இவரே. நபி (ஸல்) அவர்கள் வஃபாத் ஆனபோது கலக்கமடைந்த ஸஹாபாக்களை சமாதானப்படுத்தியது அவருடைய வரலாற்றுப் புகழ்பெற்ற உரையாகும்.
நபி (ஸல்) அவர்கள் வஃபாத் ஆனபின், அடக்கம் செய்யும் முன் ஸஹாபாக்கள் பனூ ஸாஇதா குலத்தின் மண்டபத்தில் கூடினர். அங்கு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹிஜ்ரியின் ஆறாம் ஆண்டில் புஸ்ராவின் ஆட்சியாளரிடம் நபி (ஸல்) அவர்களின் கடிதத்துடன் சென்ற ஹாரிஸ் (ரலி) அவர்களை எதிரிகள் ஷாமிலுள்ள முஅ்தாவில் கொன்றனர். அதற்குப் பழிவாங்க ஹிஜ்ரியின் எட்டாம் ஆண்டில் முஅ்தா போர் நடத்தப்பட்டது. ஆனால் முழு வெற்றி கிடைக்கவில்லை. எனவே அங்கு மீண்டும் போர் செய்ய ஹிஜ்ரியின் பதினொன்றாம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் உசாமா இப்னு ஸைத் (ரலி) தலைமையில் ஒரு படையைத் தயாரித்தனர். ஆனால் படை புறப்படும் முன் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் ஏற்பட்டது.
அந்தப் படையை இலக்கிடத்திற்கு அனுப்புவதே அபூபக்கர் (ரலி) அவர்களின் முதல் நடவடிக்கையாக இருந்தது. அந்தப் படை பெரிய வெற்றியுடன் திரும்பியது.
நபி (ஸல்) அவர்கள் வஃபாத் ஆனபின் சில அரபுக் கோத்திரங்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறின. சிலர் ஸகாத் கொடுக்க மறுத்தனர். முஸைலிமத்துல் கத்தாப், துலைஹத்துல் அஸதி என்ற ஆண்களும், ஸஜாஹ் என்ற பெண்ணும் தாங்கள் நபிகள் எனக் கூறினர். ஸித்தீக் (ரலி) அவர்கள் இவர்கள் அனைவருடனும் தைரியமாகப் போரிட்டார். முர்தத்துகள் மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பினர்; ஸகாத் மறுத்தவர்கள் அதை வழங்கினர். முஸைலிமத்துல் கத்தாப் கொல்லப்பட்டான்; துலைஹத் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான்; ஸஜாஹ் தனது ஊரான அல்-ஜஸீராவிற்கு தப்பிச் சென்றாள்.
முர்தத்துகளுடனான போரில் குர்ஆனை மனப்பாடமாக அறிந்த பல ஸஹாபாக்கள் ஷஹீத்களானார்கள். அப்போது பரிசுத்த குர்ஆன் பாதுகாக்கப்பட வேண்டி, அதை ஒழுங்காக ஒரே முஸ்ஹபாக தொகுத்து எழுதுமாறு கலீஃபா உத்தரவிட்டார். நபி (ஸல்) அவர்களின் வஹ்ய் எழுத்தாளரான ஸைத் இப்னு ஸாபித் (ரலி) இந்தப் பணியை நிறைவேற்றினார்.
அரேபியாவின் அண்டை நாடுகளில் இருந்த இரண்டு பெரிய பேரரசுகள் பாரசீகமும் ரோமாவும் ஆகும். பாரசீக ஆட்சிக்குட்பட்ட ஈராக் நோக்கி அபூபக்கர் (ரலி) அவர்கள் காலித் இப்னுல் வலீத் (ரலி) தலைமையில் படையை அனுப்பினார். அவர்கள் ஈராகின் பல பகுதிகளை கைப்பற்றினர். ரோமப் பேரரசுக்குட்பட்ட ஷாம் நோக்கி நான்கு படைகள் அனுப்பப்பட்டன. ரோமப் படையுடன் யர்மூக்கில் அவர்கள் மோதினர். வெற்றி கடினமாக இருந்தது. உடனே காலித் (ரலி) அவர்கள் ஈராகிலிருந்து ஷாமுக்கு வந்து படைகளின் பொது தலைமையை ஏற்றார். அதன் விளைவாக யர்மூக் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
ஹிஜ்ரியின் பதிமூன்றாம் ஆண்டு, பதினைந்து நாட்கள் நீடித்த காய்ச்சலுக்கு பின் ஜுமாதுல் ஆகிற் 21 அன்று ஸித்தீக் (ரலி) அவர்கள் வஃபாத் ஆனார். நபி (ஸல்) அவர்களின் அருகிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். நோய்நாட்களில் அவருக்குப் பதிலாக இமாமத் நடத்தி வந்தவர் உமருல் ஃபாரூக் (ரலி) ஆவார். சமூகம் பிளவுபடாதிருக்க, வஃபாத்திற்கு முன்பே முக்கிய ஸஹாபாக்களுடன் ஆலோசித்து, உமருல் ஃபாரூக் (ரலி) அவர்களை அடுத்த கலீஃபாவாக முன்மொழிந்து மக்களின் ஒப்புதலையும் பெற்றிருந்தார்.